Aval Vikatan article 03Jan2012
http://www.vikatan.com/article.php?mid=3&sid=392&aid=14587
விவசாயம் தர்ற திருப்தி வேற எதுல கிடைக்கும்?
மண் மணம் பேசும் முன்னாள் எம்.எல்.ஏ !
காசி.வேம்பையன், படங்கள்: க.தனசேகரன்
- இப்படி பம்பு செட்டுக்கு அருகில் நின்று சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார் ராஜாம்பாள்... முன்னாள் எம்.எல்.ஏ!
ஒரு காலத்தில் தொகுதி, சட்டமன்றம் என்று பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்த முன்னாள் அரசியல்வாதி. இன்று, கணவர் சி.வையாபுரியுடன் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு என்று சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் இருக்கும் ஆறகளுரில் இயற்கையின் மடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்!
''பொங்கல் வந்துருச்சா பாட்டி..?'' என்றால்,
''வெள்ளாமை வெளச்சல் எல்லாம் நல்லபடியா வீடு வந்து சேர்ந்தாதான் விவசாயிகளுக்கு எல்லாம் பொங்கல் வரும்!'' என்றவர், புடவையில் வியர்வையை ஒற்றியபடி ஓங்கி வளர்ந்திருந்த வேம்பின் நிழலில் அமர்ந்தார்.
''நான் தாழ்த்தப்பட்ட சாதிப் பொண்ணுங்கறதால, அவங்க வீட்டுல பயங்கர எதிர்ப்பு. கல்யாணம் முடிஞ்சு மாலையும், கழுத்துமா போன எங்களை, மாட்டுக் கொட்டகையில் தங்கிக்கச் சொன்னாங்க. ஊர்ப் பொதுக் கிணத்துல தண்ணி எடுக்கப் போனா, எல்லாரும் வாளியையும், கயித்தையும் சுருட்டிட்டு விலகிப் போனாங்க. அந்த அவமானங்கள் எல்லாம்தான்... சமுதாய ஒடுக்குமுறைக்கு எதிரா எங்கள இன்னும் தீவிரமா போராட வெச்சுது''
- இப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது இந்தத் தம்பதியின் அரசியல் வாழ்க்கை.
''கல்யாணத்துக்கு அப்புறம், காலேஜ்ல படிக்கறதுக்காக அவர் திருச்சிக்குப் போயிட, பி.யூ.சி முடிச்சுருந்த நான் 'ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க்’கா அரசாங்க வேலையில சேர்ந்தேன். கல்லூரிப் படிப்பை முடிச்சு, காங்கிரஸ் கட்சியில சேர்ந்து அரசியல், விவசாயப் பிரச்னைகளுக்காக இவர் போராடிட்டு இருந்தார். 1980-ம் வருஷ சட்டமன்றத் தேர்தல்ல, தலைவாசல் தனி தொகுதிக்கு காங்கிரஸ்ல ஸீட் கிடைக்க, 'ஹெட் கிளார்க்’ வேலையை உதறிட்டு தேர்தல்ல நின்னேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மக்கள் பிரச்னைகளுக்காக நாங்க காட்டி வந்த அக்கறையும், ஆர்வமும் என்னை அதிக ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வெச்சுது'' எனும்போது, பெருமிதம் அவர் முகத்தில்!
- தன் அரசியல் செயல்பாடுகளைப் பேசும்போது குரலில் உற்சாகம் கூடுகிறது ராஜாம்பாளுக்கு.
''ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வில் சேர்ந்து, தேர்தல்ல நின்னேன். ஆனா, ஜெயிக்க முடியல. அதுவரை என்னைப் பம்பரமா சுத்த வெச்ச அரசியல் களத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டேன். கணவர், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவரா இருக்கறதால, விவசாயம் பக்கம் ஆர்வத்தைத் திருப்பினேன். பிள்ளைகள் எல்லாம் திருமணம் முடிஞ்சு செட்டிலாகிட, நானும் அவரும் 15 வருஷமா ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எதுவும் இல்லாத இயற்கை விவசாயத்தை தொடர்ந்து செய்துட்டிருக்கோம். இந்த 25 ஏக்கர் நிலத்துல, மரவள்ளி, மஞ்சள், நெல், எள், உளுந்து சாகுபடியையும்... 10 கறவை மாடு, 35 ஆடு, 25 கோழினு கால்நடை வளர்ப்பையும் பார்த்துக்கிட்டு, நிம்மதியா வாழ்ந்துகிட்டிருக்கோம். எல்லாருடைய பசியையும் தீர்த்து வைக்கறது விவசாயம்தான். இது தர்ற திருப்தியை, வேறெந்த வேலை தரும்?!'' கைக்குள் இருக்கும் மஞ்சள் கொத்து மலர்ந்து சிரிக்க, ரசித்தபடியே நம்மிடம் கேட்கிறார் ராஜாம்பாள்!
0 Comments:
Post a Comment
<< Home