அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=225814
சி.வையாபுரி
First Published : 12 Apr 2010 12:00:00 AM IST
உழன்றும் உழவே தலை என உழவின் உயர்வைக் குறள் சொல்கிறது. உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என ஒளவையின் நல்வழி உயர்ந்த வாழ்க்கைக்குத் திசைகாட்டுகிறது. உணவு எனப்படுவது நிலமும் நீரும் என உணவின் பிறப்பிடத்தைக் கூறி உழவனைப் பசிப்பிணி மருத்துவன் என புறநானூறு இலக்கணப்படுத்துகிறது.குறிஞ்சி என்னும் மலை சார்ந்த வனங்களின் மழை வளத்தால் வழியும் நீர், முல்லை வழி ஆறுகளாகி, மருத நிலத்தில் நகர்ந்து செந்நெல் வயல்களைச் செழிக்கச் செய்தபின் மீன் வளம் பெருகிக் காணும் நெய்தலை ஒட்டிய கடலில் சங்கமிக்கும். மழை வளம் குன்றி குறிஞ்சியும், முல்லையும் வறண்டால் பாலை என சங்கத் தமிழ் நிலங்களை வரிசைப்படுத்துகிறது.இந்நிலங்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களின் உணவு முறைகள், உறைவிட வழிகளை எல்லாம் வகை வகையாய்த் தொகுத்து தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.÷நாடு பூராவிலும் பூகோள, மண்வள, இயற்கை தட்பவெட்ப பருவகால மழையின் அளவுகள், தன்மைகளின் அடிப்படையில் பண்டைய அனுபவம் மற்றும் அறிவியல் பூர்வமான பயிர்வாரி முறை, மழை நீர், நிலத்தடி நீர் பயன்பாடுகள், பிரதேச உணவுப் பழக்கங்கள் அமைந்தாலன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பு கானல் நீராகிவிடும். பருப்பு, பயறு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் விளையத்தக்க நிலங்களுக்கெல்லாம் பாசன வசதிகளைச் செய்து கொடுத்த கண்மூடித்தனமான செயல்களால் சாகுபடியில் கரும்பு, நெல் ஒருபுறமும், பருப்பு பயறு எண்ணெய் வித்துகள் மறுபுறமும் நிலைகுலைந்து விளைச்சல் சரிவடைந்தது. எள்ளும், கொள்ளும் விளைந்த நிலங்களில் நெல், கரும்பு என்றானால் மரபுவழி நஞ்சைப் பாசனம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியில் தடுமாற்றங்கள் வராதா?தினை, சாமை, சீரகம், கடுகு, கேழ்வரகு, பழவகைகள், மூலிகைகள் என்று விளையும் மலைப்பிரதேசங்களில்கூட நிலத்தடி நீரை வைத்து நெல்லும் கரும்பும் பயிரிட அனுமதித்தால் மலைப்பகுதிகளும் விரைந்து வறண்டு, அங்கு வாழும் உயிரினங்கள் தாகத்தால் மடிவது பதற்றமான நிலையல்லவா? நீர், நிலப் பயன்பாடுகளில் சென்ற 35 ஆண்டுகளில் முரண்பாடுகள் முற்றிவிட்டன. புவிவெப்பமும் சேர்ந்து குடிநீருக்காக மலைஉச்சி வன உயிரினங்களும், நிலப்பரப்பு மக்களும் ஒருசேர அலைவதற்கு முற்றிலும் சுயநலத்தை உள்ளடக்கிய பாசனத் திட்டங்களும், நீர்பராமரிப்பும் திறமையற்ற அரசு நிர்வாகங்களுமே மூலகாரணங்கள்.÷மக்கள் தொகை குறைவாகவும், தட்ப வெப்பநிலை மிதமாகவும், கொண்டுள்ள மேலை நாடுகள் தங்களுக்கு ஏற்புடையது என வகுத்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், நவீன கருவிகளின் பயன்பாடு போன்றவற்றையெல்லாம் வரம்பின்றி இந்தியாவுக்குள் புகுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம் கொண்டு பலதரப்பட்ட தட்பவெப்ப மண்டலங்களையும் அவற்றுக்கு ஏற்புடையதான இயற்கையோடு இயைந்த உணவு மற்றும் உற்பத்தி சாதனங்களையும் புறந்தள்ளினால் வேலை இல்லாத் திண்டாட்டமும், எரிசக்தி பற்றாக்குறையும், சுற்றுப்புறச்சூழல் கேடும் தோன்றிவிடும் என்பதைச் சிந்திக்கத் தவறுவது விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு நிகரான நிலைப்பாடாகும்.இந்தியாவில் மிகைப்பட்ட வேளாண் எந்திர உபயோகங்களினால் நன்மைக்கு மாறாகத் தீமைகளே அதிகமாகும். விவசாய வேலைகளில் இயன்ற அளவு மனித உழைப்புக்கு முன்னுரிமை தருவதன் மூலம் வலுவான சமூக அமைதியையும் நலமிகுந்த பொது ஒழுக்கத்தையும் நிலைநிறுத்த முடியும். நிலத்தடி நீரைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தும் போதும், அளவின்றி ரசாயன உரங்களைப் பயிர்களுக்குத் தொடர்ந்து இடும் போதும், வளம் குறைந்து விளை நிலங்கள் மலட்டுத் தன்மைக்கு வந்துவிடும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகள் நன்மை செய்யும் புழு பூச்சிகளையும் அழித்துவிடுவதால் காலப்போக்கில் உயிரினங்களின் இயல்பான உணவு சுழற்சி முறைகளில் தடைகள் முற்றி சுற்றுப்புறச் சூழல்களுக்குக் கேடுகள் சூழ்ந்துவிடும்.ஆட்சி அதிகாரம் தங்கள் வசமே என்பார்க்கும், கொலையின் கொடிய முரடர்க்கும், கல்விஇல்லாத குருடர்க்கும், நீதியைத் தேடி அலுத்துப் போனதாய்க் கூறும் தீவிரவாத வன்முறையாளர்க்கும்கூட பசி வந்தால் ஆற்றுவது உணவு ஒன்றுதான். வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு என்பதையே முதல்நிலையில் வைக்க வேண்டியதாகிறது.வேலை இல்லை என்னும் ஓலமும், வேலைக்கு ஆள் இல்லை என்கிற அவலமும் அகல்வதற்கு இதைவிடவும் வேறு எது சரியானது, எளிதானது. எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று மூன்று ஆண்டுகளாகத் திரிந்த பத்து வாலிபர்கள் வாய்ப்பு ஏதும் இருந்தால் தங்களுக்கு வழிகாட்டும்படி கேட்டார்கள்.விவசாய வேலைக்குத் தயாரா என்று வினவியதற்கு தாங்கள் பட்டதாரிகள் என்றும், தங்களிடம் உள்ள நிலங்களில்கூட வேலை பார்க்க விருப்பம் இல்லாமல்தான் வேறு வேலை தேடி அலைவதாகவும் சொன்னார்கள்.அவர்களில் சிலர் குழந்தைகளோடு இருப்பதும், மனைவியின் கூலியை வைத்தே தங்களது குடும்பம் நடப்பதாகவும் அறிய முடிந்தது. பத்துபேருமே பத்தாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை எதிலுமே சொல்லிக் கொள்ளும்படியாய் மதிப்பெண் பெறவில்லை என்பதை அறிய வேதனை மிகுந்தது. தகுதி, திறமை என்று எதையும் பெற்றிராத அவர்களிடம் இருந்தது வயதும் உடலும் மட்டும்தான். 10-ம் வகுப்போடு இவர்களை வடிகட்டியிருந்தால் தாங்கள் வாழும் இடங்களிலேயே குலத்தொழில், அல்லது வேளாண்மையில் ஈடுபட்டு இந்நேரம் தக்க அனுபவமும், பயிற்சியும் பெற்று சொந்தக் காலில் நிற்கும் சுயமரியாதையான வாழ்வை உறுதி செய்திருக்க முடியும்.ஆனால் நம் ஊர் விவசாயத்தில்தான் என்ன இருக்கிறது உழவடை, அறுவடை என்று எல்லாவற்றுக்குமே எந்திரங்கள் புழங்கிவிட்டன. அதனால் உடலுழைப்புக்கான வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன.மலை முதல் கடற்கரை வரையிலும் இப்போது குடிக்கத் தண்ணீர் இல்லாத நிலையும் எப்படி வந்தது என்கிற கேள்வி வலுவடைகிறது. இயற்கை வழி மண்டல வழியான பயிர்வாரி முறை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்று உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜோக்கிம் வான் பிரெüன் 2008-ம் ஆண்டு கூறியதை தீர ஆராய்வது இப்போது அவசியம் ஆகிறது. ஆகவே, தேவையை உள்ளடக்கிய தன்னிறைவான உற்பத்திக்கு நதிப்படுகை வழி பயிர்வாரி முறையும், விளைநிலங்களில் இயற்கை சார்ந்த பயிர் சுழற்சி முறையும் அவசியம். "பானை சோற்றுக்கு பருக்கை பதம்' என்பதுபோல இதை அந்த பத்து பட்டதாரிகளின் நிலையை வைத்தே இன்றைய நடைமுறைகளை விருப்பு, வெறுப்பின்றி விவாதிக்க வேண்டும்.மலிவான கல்விச் சாளரங்களின் வழியாய் உயர்கல்வி மாயைக்குள் நுழைந்து பட்டமும் பெற்ற பின்னர் போட்டிகளில் தாக்குப்பிடிக்க முடியாத அநேகர் அந்த 10 பேரைப் போலவே திகைத்துப் போயுள்ளனர். சுயநலத்தில் ஆளுமையைத் தொலைத்து நிற்கும் ஆட்சியில், போலி மருந்து தயாரித்து விற்பது போன்ற சமூக விரோதச்செயல்களுக்கு படித்த பலரும் வலிந்து தள்ளப்படுகிற துயரம் பெருகி வருகிறது. உணவுத் தேடலின் அருமையை இவர்களுக்குப் புரிய வைக்க அரசாங்கம் தவறிவிட்டது. உற்றுநோக்கினால் 50 சதத்திற்கும் கீழ் பிளஸ் டூ படிப்பிலும் 60 சதத்திற்கு கீழ் பட்டப்படிப்பிலும், 75 சதத்திற்கு கீழ் மருத்துவம், சட்டம், பொறியியல் முதலான உயர் கல்வியிலும் மாணவர்களைச் சேர்ப்பது வேண்டாத ஒன்று என்கிற முடிவுக்கு வந்தே தீரவேண்டும்.பட்டதாரிகளில் பலர் திறமை என்று எதுவுமின்றி எதிலும் நிலைக்க முடியாமல் சும்மா இருப்போர் பெருகுவதால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும்.ஆக, அனைவருக்கும் கல்வி என்பதை 10-ம் வகுப்போடு அல்லது 14 வயதுக்குள் முடித்துவிடவேண்டும்.அடுத்தகட்ட படிப்புக்கு விதை நேர்த்தி செய்வதுபோல தேவைக்கு ஏற்றாற்போல் தரம் பார்த்து அனுமதிக்கிற நடைமுறையைத் துணிந்து தோற்றுவிக்க வேண்டும்.உயர் கல்வி என்பது ஓர் அலங்காரப்பொருள் அல்ல, ஆடம்பரத்துக்கு ஆனதும் கிடையாது, ஒளிரும் அறிவையும், மிளிரும் திறமையையும் மெருகேற்றிக் கொள்கிற அரியதோர் வாய்ப்பு என கருதும் மனப்பாங்கு கொள்கைத் திட்டங்களை வடித்து வழங்கும் அரசாங்கத்திடம் முதலில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் 10 முதலாளிகளை வலுவடையச் செய்வதைக் காட்டிலும் 10 லட்சம் விவசாயிகளை தலைநிமிரச் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.வேளாண்மையை மறந்து வெள்ளாமையை இழந்து, விவசாயம் விளங்காத ஒன்று என்று க ருதி உயர்கல்வித் தொழில் முதல் கார் தொழில் வரை வரிச்சலுகைகளைத் தரும் ஆட்சியில் முரண்பாடுகள் முற்றி மக்களின் கும்பி எரிந்து குடலும் கருகிப் போவது உறுதி.