“மன உறுதி இருந்தால்.... மாயமாய் மறையும் சாதி!”
ஆச்சர்யமூட்டும் 53 வருட காதல் பயணம்
ஃபீலிங்ஸ்
படிப்பு, வேலை, தொழில் என்று பலதரப்பட்ட நிலைகளில், பலவிதமான சாதியைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகக் கலந்துதான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏன்... கலப்பு மணங்கள்கூட இங்கே கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படி கைபிடித்தவர்களில் பலரும் சந்தோஷ வாழ்க்கை வாழத்தான் செய்கின்றனர்.
இத்தகைய சூழலில்... தர்மபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளவரசனை, வன்னிய இனத்தைச் சேர்ந்த திவ்யா காதலித்துக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட விஷயம் மட்டும், 'சாதித் தீ'யில் சிக்கி சின்னாபின்னமானது... பரிதாபம்தான்! திவ்யா பிரிந்து சென்றுவிட்ட நிலையில், இளவரசன் மர்மமான முறையில் இறந்திருப்பது பெரும்புயலைக் கிளப்பியுள்ளது.
'கலப்புத் திருமணம் செய்துகொண்டு, சந்தோஷமாக நீண்ட காலத்துக்கு வாழ முடியாதோ' என்கிற பயம் கலந்த கேள்வி கிளம்பியிருக்கும் நிலையில், ''நிச்சயமாக வாழ முடியும்!'' என்கின்றனர்... 53 ஆண்டுகளுக்கு முன்பே கலப்புத் திருமணம் செய்துகொண்டு இன்றுவரை நிறைவான வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கும் வையாபுரி - ராஜாம்பாள் தம்பதி!
முக்குலத்தோர் 'அகமுடையர்’ சாதியை சேர்ந்த வையாபுரி, தாழ்த்தப்பட்ட 'அருந்ததியர்’ சாதியைச் சேர்ந்த ராஜாம்பாள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். வையாபுரி, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர். ராஜாம்பாள், இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்தவர்.
சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரில் வசிக்கும் தம்பதியைச் சந்தித்தோம். 75 வயதாகும் வையாபுரி, நினைவுகளை அசைபோட ஆரம்பித்தார். ''பாடப் புத்தகத்துல படிச்ச 'சாதியிலே மதங்களிலே... சாத்திர சந்தடிகளிலே...’ என்ற வள்ளலாரோட வரிகள், என் மனசுல ஆழப் பதிஞ்சிருச்சு. அதனால, பள்ளிக்கூடத்துலயும், கிராமத்துலயும் இருக்கற சாதி முறைகளை நினைச்சு வருத்தப்பட்டேன். கண்டிப்பா தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணைத்தான் திருமணம் செய்துக்கணும்கிற எண்ணம் அப்பத்தான் வந்துச்சு.
தீண்டாமை ஒழிப்பைப் பத்தி நண்பர்கள்கிட்ட தீவிரமா பேசுவேன். ஒருநாள் இவளோட (ராஜாம் பாள்) சின்ன அண்ணன்கிட்ட, 'தீண்டாமையை ஒழிக்கணும்னா... உன் சாதியை (தாழ்த்தப்பட்ட) விட, உயர்ந்த சாதினு சொல்லப்படுற சாதியைச் சேர்ந்த என் தங்கச்சியை நீ கல்யாணம் பண்ணிக்கோ... உன்னோட தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு சொன்னேன். அதுக்கு அவங்க அண்ணன் மறுத்துட்டார். பிறகு, என்னோட நண்பர் 'வாழப்பாடி’ ராமமூர்த்தியை அனுப்பி இவங்க வீட்டுல பொண்ணு கேட்டேன். பிறகு, 40 பேரை அனுப்பி பொண்ணு கேட்க சொன்னப்ப... இவளோட மூத்த அண்ணன் இருசப்பன் எம்.எல்.ஏ-வும், அவங்க அப்பாவும் பொண்ணு கொடுக்க மறுத்துட்டாங்க.
பிறகு, படிக்கறதுக்காக இவளை திருச்சிக்கு அனுப்பிட்டாங்க. இடையில ஊருக்கு வரும்போது பார்த்துக்குவோம். அப்படியே எங்களோட காதல் வளர ஆரம்பிச்சுது. அதுக்கு பிறகு, ஒருநாள் இரவோட இரவா என்னைத் தேடி தனியா வந்துட்டா... பிறகென்ன, திருச்சியில நண்பர்கள் முன்னிலையில கல்யாணம்!'' என்று, ஓரக்கண்ணால் பார்த்து வையாபுரி சிரிக்க, ராஜாம்பாள் தொடர்ந்தார்.
''கல்யாணம் நடந்து அஞ்சு நாட்களுக்கு பிறகுதான், அவரோட வீட்டுக்கே போனோம். நான் தாழ்த்தப்பட்ட சாதிங்கறதால எங்க ரெண்டு பேரையும் மாட்டுக்கொட்டகையில் தங்கிக்க சொன்னாங்க அவங்க வீட்டுல. நாங்க மறுத்து, பக்கத்துல காலியா இருந்த வீட்டுல தங்கினோம். முதல் ரெண்டு நாள் ஹோட்டல் சாப்பாடுதான். அப்புறம் இவரோட அத்தை, சமையல் சாமான்களைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. சமைக்கறதுக்காக ஊர் பொதுக் கிணத்துல தண்ணி எடுக்க போனேன். எல்லாரும் வாளியையும், கயிற்றையும் சுருட்டிட்டு ஓடிட்டாங்க. 20 நாள் வரை யாருமே தண்ணி எடுக்க வரல. அந்த நேரத்துலயெல்லாம், சாதிகளை நினைச்சு அழுகையா வந்துச்சு. பல நேரங்கள்ல சாதியைச் சொல்லி என்னை திட்டுவாங்க. 'அது அவங்களோட குணம். அதை நினைச்சு நீ கவலைப்படாதே’னு சொல்லி இவருதான் சமாதானப்படுத்துவார்.
காலமும் காட்சிகளும் ஓட... நான், 'ஜூனியர் அசிஸ்டன்ட்’ கிளார்க் வேலைக்கு போயிட்டேன். இவர், காங்கிரஸ் கட்சியில சேர்ந்து அரசியல், விவசாய பிரச்னைகளுக்காக போராடிக்கிட்டு இருந்தார். 80-ம் வருஷம் நடந்த சட்டமன்ற தேர்தல்ல தலைவாசல் தனித்தொகுதிக்கு... காங்கிரஸ் வேட்பாளரா ஸீட் கொடுத்தாங்க. 'ஹெட் கிளார்க்’ வேலையை ராஜினாமா பண்ணிட்டு, அரசியல்ல இறங்கினேன். அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனேன். அதுவரை சாதி அடையாளத்தோட பார்த்தவங்க, அப்புறம் எம்.எல்.ஏ-வா பார்த்தாங்க!'' என்றபோது, துயரங்கள் வென்ற பெருமிதம் அவர் வார்த்தைகளில். தொடர்ந்தார்...
''கலப்புத் திருமணம் செய்துகிட்ட தம்பதிகளோட முக்கிய பிரச்னை... சொந்தக்காரங்களோட விசேஷங்களுக்கு போக முடியாம தனிச்சு விடப்படுறதுதான். எங்களுக்கும் ஆரம்பத்துல அப்படிதான் இருந்துச்சு. போகப்போக புரிஞ்சிகிட்டு சொந்தக்காரங்க ஏத்துக்கிட்டாங்க. எங்களுக்கு மொத்தம் 4 பசங்க, 3 பொண்ணுங்கனு மொத்தம் 7 பிள்ளைங்க. 3 பேருக்கு அகமுடையர் சாதியிலயும், 4 பேருக்கு தாழ்த்தப்பட்ட சாதியிலயும் வரன் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சுருக்கோம். மூத்த பிள்ளை உடல்நிலை சரியில்லாம இறந்துட்டான். மற்ற எல்லா பிள்ளைகளும் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கறாங்க'' என்று ராஜாம்பாள் சொல்ல,
''சாதி வெறி பிடிச்சவனெல்லாம், பார்வைஇல்லாதவர் யானையைப் பார்த்த கதையா, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதினு சொல்லிக்கிட்டு அலையுறான். எங்களோட 53 வருஷ குடும்ப வாழ்க்கை அனுபவத்தை வெச்சு சொல்றேன்... ரெண்டு பேர் சேர்ந்து வாழறதுக்கு சாதிங்கிறது தேவையில்லாத ஒண்ணு. காதலிச்சுக் கலப்பு திருமணம் செய்துக்கறவங்களுக்கு... போராடுற குணமும் தெம்பும் இருந்துட்டா... நிச்சயமா ஜெயிக்க முடியும்!''
- மனைவியுடன் இணைந்து விடைகொடுத்தார் வையாபுரி, சந்தோஷமாக!
- காசி.வேம்பையன், படங்கள்: க.தனசேகரன்