Aragalur தமிழர் வீரம்
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0427.htmlதமிழர் வீரம் : ஆசிரியர் - ரா.பி. சேதுபிள்ளை 1947
பெண்ணை நாட்டுப் பெருவீரர்
வாணர்குல வீரம்
மகத நாடு
தமிழ் நாட்டில் வாணர் என்னும் பெயர்பெற்ற குறுநில மன்னர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள். பெண்ணையாறு பாயும் நடு நாட்டின் ஒரு பகுதி அவர் ஆட்சியில் அமைந்த நாடு. அதற்கு மகத நாடு என்று மறு பெயரும் உண்டு. அதனால் வாணர்குல மன்னனை மாகதர்கோன் என்றும், மகதேசன் என்றும் தமிழ்ப் பாவலர் புகழ்ந்துரைப்பாராயினர்.[6]
வாணர்குலப் பெருமை
தமிழ் நாட்டு முடிவேந்தரும் பெண்கொள்ளும் பெருமை சான்றது வாணர் குலம். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் ஒரு வாணர்குல மங்கையை மணந்தான். 'சீர்த்தி' யென்னும் பெயருடைய அந் நல்லாள் "மாவலி மருமான் சீர்கெழு திருமகள்" என்று மணிமேகலைக் காவியத்திலே போற்றப்படுகின்றாள்.
ஆறைக் கோட்டை
வாணர்குல மன்னர் கோட்டை கட்டி அரசாண்ட இடம் ஆறகழூர் என வழங்கிற்று. ஆறை என்பது அதன் குறுக்கம். எனவே, ஆறைக்கோன் என்ற பெயரும் வாணர்குல மன்னனைக் குறிப்பதாயிற்று.[7]
பஞ்சநதி வாணன்
தமிழரின் ஆண்மைக்கு ஒரு சான்றாக விளங்கும் கலிங்கப் போரிலே கலந்துகொண்ட குறுநில மன்னருள் ஒருவன் வாணர் குலப் பெருமகன்.[8] அவன் தஞ்சைத் தலைவன்; பஞ்சநதி வாணன் என்னும் பெயரினன். காஞ்சி மாநகரினின்றும் கலிங்கத்தை நோக்கித் தமிழ்ச் சேனை எழுந்தபோது புலிக்கொடி தாங்கிய போர்க்களிற்றின்மீது படைத்தலைவன் - தொண்டைமான் - பெருமிதமாகச் சென்றான். அவனுக்குப் பின்னே பல்லவர் கோமான்; அவனுக்குப் பின்னே வாணர் கோமான். இவ்வாறாக நடந்தது தமிழ்ச் சேனை. எனவே, கலிங்க நாட்டில் தமிழர் பெற்ற வெற்றியில் பஞ்சநதி வாணனுக்கும் பங்குண்டு என்பது சொல்லாமலே விளங்குமன்றோ?
பாண்டிப் போர்
வாணர்குல வீரர் பெரும்பாலும் சோழ மன்னர் சார்பாகவே போர் புரிந்தார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பாண்டியிலே போர் மூண்டது. வீரபாண்டியன் சீறியெழுந்தான்; சிதறிக் கிடந்த மறப்படையைத் திரட்டினான்; சோழர் ஆதிக்கத்தை உதறி எறிந்தான்; வீர சுதந்திரம் பெறுவதற்கு வெம்போர் புரியத் துணிந்தான். குடமலை நாட்டுச் சேரன் ஒரு படையனுப்பிப் பாண்டியனை ஆதரித்தான். இவற்றையெல்லாம் ஒற்றர் வாயிலாக அறிந்தான் குலோத்துங்கன்; உடனே பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். கீழ்பால் உள்ள நெட்டூரில் இரு திறத்தாரும் எதிர்த்து நின்றார்கள். செருக்களம் செங்களமாயிற்று. பாண்டியன், முன்னணியில் நின்று கடும்போர் புரிந்தான்; வீரமொழியால் மறப்படையை ஊக்கினான். ஆயினும் அவன் சிறுபடை சலிப்புற்றுத் தளர்ந்தது. புலிக்கொடியின் முன்னே மீன் கொடி தாழ்ந்தது. பாண்டியன் மணிமுடி இழந்தான்; பட்டத்தரசியையும், படைகளையும் கைவிட்டு ஓட்டம் பிடித்தான். வீரமும் மானமும் விட்டு ஓடிய மன்னவன் தேவியைச் சோழன் சிறைப்பிடித்தான்; தன் வேளத்தில் வைத்தான்.[9]
பாணனுக்குப் பாண்டிநாடு
நெட்டூர்களத்தில் சோழன் பெற்ற வெற்றியின் புகழ் எட்டுத் திசையும் பரந்தது. வாகைமாலை சூடிய வேந்தனை யும் வீரரையும் இசைப்பாட்டில் ஏற்றினான் ஒரு பாணப் புலவன். அப்பாட்டைக் கேட்டான் குலோத்துங்கன்; ஆனந்தமுற்றான்; செவிக்குத் தேனெனப் பாணன் வார்த்த தெள்ளிய கவிதையை, "அருந் தமிழ் விருந்து" என்று புகழ்ந்தான். அருகே நின்ற அப் புலவனை நோக்கி, "உன் பாட்டுக்கு ஒரு நாட்டைப் பரிசளிக்க ஆசைப்படுகிறேன்; இப் பாண்டிநாடு இனி உனக்கே உரியது; தந்தேன்" என்றான்.[10] கவிக்குலம் களிப்புற்றுக் கூத்தாடிற்று. "நல்ல பாட்டுக்கு நாட்டைப் பரிசளித்தான் தமிழ் வேந்தன்" என்று பாராட்டினர் ஊரார் எல்லாம்.
-----
பாணனது நாணம்
சோழன் பேசிய புகழுரை கேட்டு நாணினான் பாணப் புலவன். பாண்டி நாட்டின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இசையவில்லை. தமிழ்ப் பாட்டின் சுவையறிந்த சோழனைப் பணிந்து போற்றி, "அரசே, பண்ணோடு பழகும் இப் பாணனுக்கு மண்ணாளும் பதவி தகுமா? பைந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டை நீயே பாதுகாத்துப் பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்தி நின்றான்.
பாண்டிப் போரில் வாணகோவரசன்
பாண்டிநாட்டில் நிகழ்ந்த இப் போரில் சோழ மன்னர்க்குப் பேருதவி புரிந்தவன் ஒரு வாணகோவரசன். பாண்டியன் சேனையை முறியடித்த பெருமை அவனுக்கே சிறப்பாக உரியதாகும். போர்க்களம் பாடிப் புகழ் பெற்ற பாணப் புலவனை வாணகோவரசன் தன் தோழனாகக் கொண்டான்; போர் ஒழிந்த காலத்தில் அவனோடு ஆனந்தமாகப் பேசிப் பொழுது போக்கினான்.
வாணனும் பாணனும்
ஒரு நாள் இரவில் வாணன் மாறுகோலம் பூண்டு யாருமறியாது வெளிப்பட்டான்; பாணப் புலவனது வீட்டின் அருகே சென்றான். கதவு அடைத்திருந்தது. அதைத் தட்டினான் வாணன். உள்ளே இருந்த பாணன் கதவைத் திறவாமல், 'யார்?' என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே நின்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,"ஐயனே! அருந்தமிழ் வாணனே! அன்று படைத்திறத்தால் பாண்டியன் பேரை மாற்றினாய். என்றும் கொடைத் திறத்தால் கார்மேகத்தின் பேரை மாற்றினாய். இவ்வாறு பழகிய உனக்கு உன் பெயரை மாற்றுதல் அரிதோ?" என்று நயமுறப் பாடினான் பாணன்.[11]
வாணன் குறும்பு
பின்னொரு நாள் பாணன் வீட்டில் உலையேற வில்லை; அமுதுபடி இல்லையென்று அன்புள்ள மனையாள் அறிவித்தாள். வாணகோவரசனைக் கண்டாற் கலிதீரும் என்று சொல்லிப் புறப்பட்டான் பாணன்! வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; "உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் "கிருது" உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, "அண்ணலே! கலை வள்ளலே! உலைக்குரிய பண்டம் நாடி உன்னிடம் வந்தேன். குறிப்பறியும் கொற்றவனாகிய நீ, கொலைக்குரிய இவ்விலங்கைக் கொடுத்தாயே! வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை?" என்று வினயமாகப் பாடினான்.(12) அது கேட்டு இன்புற்ற வாணன் இனிய பரிசளித்துப் பாணன் கவலையைப் போக்கினான்.
ஏகம்பவாணன்
இத்தகைய வாணர்குலம் பல வீரரைத் தமிழகத்திற்குத் தந்தது. அவர்களுள் ஒருவன் ஏகம்பவாணன். தமிழ் மணங்கமழும் பாமாலையை அவர்க்குச் சூட்டி மகிழ்ந்தனர் செஞ்சொற் கவிஞர். "வாணன் புகழுரையாத வாய் உண்டோ? அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ?" என்று வாயாரப் போற்றினார் ஒரு கவிஞர்.[13] வாழையடி வாழையென வளர்ந்தது அவ்வாணர் குலம்; வீரம் விளைந்தது; தமிழை வளர்த்தது; அழியாப் புகழ் பெற்றது.
[6]. பெருந்தொகை, 1158,1159.
[7]. பெருந்தொகை, 1185.
[8]. கலிங்கத்துப்பரணி, 365
[9]. உயர் குல மாதர்க்குச் சோழர் அமைத்த சிறைக் கோட்டம் வேளம் என்னும் பெயர் பெற்றது.
[10]. "மதுரை கொண்ட தோள்வலி பாடிய பாணனைப் பாண்டியன் என்று பருமணிப் பட்டம் சூட்டினான்" என்று குலோத்துங்க சோழன் மெய்கீர்த்தி கூறுகின்றது.
[11]. பெருந்தொகை, 1188.
[12]. "உலைக்குரிய பண்டம் உவந்திரக்கச் சென்றால் கொலைக்குரிய வேழம் கொடுத்தான் - கலைக்குரிய வாணர்கோன் ஆறை மகதேச னுக்கிந்தப் பாணனோடு என்ன பகை." - பெருந்தொகை, 1188.
[13]. "வாணன் புகழ்எழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழ்உரையா வாய் உண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு." - பெருந்தொகை, 1181.